விவசாயப் பிரச்னை: கமலுக்கு சவால்விடும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் - ஏற்பாரா கமல்?

கமல் அவர்களுக்கு, தங்களுடைய சமுதாய நலன் கொண்ட அரசியல் பிரவேசத்துக்கு வாழ்த்துகள்.
விவசாயப் பிரச்னை: கமலுக்கு சவால்விடும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் - ஏற்பாரா கமல்?

கமல் அவர்களுக்கு, தங்களுடைய சமுதாய நலன் கொண்ட அரசியல் பிரவேசத்துக்கு வாழ்த்துகள்.
 
இந்தியா, கிராமங்களில் வாழ்கிறது. கிராமங்கள் அழியுமானால் இந்தியாவும் அழியும் என்கிற காந்தியடிகளின் எச்சரிக்கைக்கு வாழ்வு கொடுத்ததற்கும், அதற்கான தீர்வை உருவாக்க நினைப்பதற்கும் விவசாயிகள் தங்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளனர்.
 
ஆனால், அந்தத் தீர்வை தாங்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் யாசித்தது, இந்தியர்களின், பிரச்னைகளைத் தீர்க்கும் இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களின் திறனுக்கு நேர்ந்த அவமானமாகக் கருதுகிறோம்.
 
தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்கிறது என்பது தாங்கள் அறியாததல்ல. அப்படியிருக்க, தாங்கள் கிராம மேம்பாட்டுக்கான தீர்வை, உரிமையோடு இந்தியர்களிடம் கேட்டிருந்தால் அது சிறப்பான அணுகுமுறையாக இருந்திருக்கும்.
 
தமிழகத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களால், பதினாறு ஆண்டுகால விடாமுயற்சியில் விவசாயப் பிரச்னை ஆராயப்பட்டு, முழு தீர்வு (திட்டமிடுதலில் இருந்து விற்பனை செய்துகொள்ளும் வரையிலான அனைத்து சேவைகளையும் கிராம அளவிலேயே விவசாயிகள் செய்துகொள்ளும்படியான தீர்வு) உருவாக்கப்பட்டது. அது ஆந்திர மாநிலத்தில். ஒரு ஒன்றியத்தில் (முப்பது கிராமங்களில்) இரண்டு ஆண்டு காலம் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டப்பட்டது. ஒட்டுமொத்த கிராம மேம்பாட்டுக்கு, குறிப்பாக விவசாயப் பிரச்னைக்கான தீர்வுக்கு வழிவகுக்கும் இந்தத் திட்டத்தை மாவட்ட அளவில் விரிவாக்கம் செய்வதற்கு, நாட்டின் (மாநில, மத்திய) உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழு தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியது. ஓராண்டு தொடர் பரிசீலனைக்குப் பிறகு, இத்திட்டம் இந்திய விவசாயத்தின் திருப்புமுனையாக அமையும், புது விவசாய அணுகுமுறைக்கு வழிவகுக்கும், நாட்டில் உள்ள இரண்டரை லட்சம் பஞ்சாயத்துகளுக்கும் விரிவாக்கம் செய்யக்கூடியது என்று கூறி, கடப்பா மாவட்டம் (1000 தகவல் மற்றும் செயல் மேலாண்மை மையம்), ஆந்திராவில் செயல்படுத்த நிதி ஒதுக்கி ஒப்புதல் வழங்கியது.
 
அரசு உயர்மட்டக் குழுவில் விவசாயம், கிராமம் குறித்து நன்கு அறிந்த நேர்மையான அதிகாரிகள் (பலர் M.Sc., Agri முடித்துவிட்டு IAS ஆனவர்கள்) இடப்பெற்றிருந்தனர். இந்தத் திட்டம், மாநில முதல்வர், நிதி அமைச்சர், விவசாய அமைச்சர், சட்ட அமைச்சர் என அனைவரின் ஒப்புதலையும் பெற்றிருந்தது.
 
இதைவிட வேறென்ன வேண்டும்? இந்திய இளைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டுக்கு வேறு என்ன செய்ய வேண்டும்? 
 
ஆனால், முக்கிய அதிகாரிகளின் தொடர் மாற்றம், அம்மாநில முதல்வரின் திடீர் மறைவு, தெலங்கானா பிரச்னை போன்ற விஷயங்களினால், இத்திட்டம் நியாப்படுத்தமுடியாத, சந்தேகத்துக்கு இடமளிக்கக்கூடிய வகையில், தொடங்கும் முன்னரே நிறுத்தப்பட்டது. ஆனால், மனம் தளராமல் எங்கள் முயற்சியை தொடர்ந்துகொண்டிருக்கிறோம். தற்போது, டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் இந்தத் தீர்வை செயல்படுத்தவேண்டி, மத்திய அரசிடம் முயற்சித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், பாரதப் பிரதமர் அவர்களிடம் இந்தத் தீர்வை கொண்டுசெல்ல விடாமல் சில சக்திகள் தடுக்கின்றன. 
 
இதுதான் இந்தியாவின் நிலை. இதற்கு ஹார்வர்டு பல்கலைக் கழகம் என்ன தீர்வை தரும்? தர முடியும்? இந்தியாவின் விவசாயப் பிரச்னை, பல உலக நாடுகள் விரும்பும் ஒன்று. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தமிழர்கள் வேண்டுமானால் கூறிக்கொண்டிருக்கலாம். தற்போதைய உலகம் அப்படியல்ல. தாங்கள் தொடங்க வேண்டிய இடம் இங்கிருந்துதான். இதற்கு தாங்கள் என்ன தீர்வு வைத்திருக்கின்றீர்கள்? அரசு செயல்படும் விதத்தை எப்படி மாற்றப்போகிறீர்கள் என்பதில்தான் கிராமப்புற, விவசாய மேம்பாட்டுக்கான தீர்வு உள்ளது.
 
தங்கள் அரசியல் வாழ்வின் தொடக்கமாக, முதல் சவாலாக இதை எடுத்துக்கொள்ளுங்கள். ஹார்வர்டில் தாங்கள் யாசித்துப்பெற்ற தகவல்களோடு, மாநாட்டு மேடையில் எங்களோடு விவசாயப் பிரச்னைகளையும், தீர்வையும் விவாதிப்பதற்கு வாய்ப்பு வழங்குங்கள். இந்தியா இந்தப் புது முயற்சியைக் காணும். நாட்டின் ஒட்டுமொத்த கவனமும் திசை திரும்பும். தாங்கள் புத்திசாலித்தனத்தை ரசிப்பவர். சவாலை விரும்புபவர். இந்த அழைப்பை ஏற்கும்பட்சத்தில், இந்திய விவசாயப் பிரச்னைக்கான தீர்வை நாடு பெறும் என்பது உறுதி.
 
காத்திருக்கின்றோம்.
 திருச்செல்வம் ராமு
(Mission IT-Rural, www.it-rural.com, 9840374266)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com