அரபு நாடுகளுடன் இஸ்ரேல் நெருக்கமாகி வருவது ஏன்?

  • ஜுபேர் அஹ்மத்
  • பிபிசி செய்தியாளர், புது டெல்லி
அரபு நாடுகளுடன் இஸ்ரேல் நெருக்கமாகி வருவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேலில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு திங்கள்கிழமை முதல் அதிகாரப்பூர்வ விமானம் சென்றிருப்பது, ஒரு வரலாற்று நிகழ்வாகும். கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி உடன்படிக்கையின் பின்னணியில் பரஸ்பர உறவுகளை இயல்பாக்குவதற்கான முதலாவது முறைப்படியான மற்றும் முக்கியமான நடவடிக்கையாகும் இது.

இஸ்ரேலிய அதிகாரிகளோடு கூடவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரும் விமானத்தில் இருந்தார். விமானத்தில் இருந்து கீழே இறங்கிவரும்போது, "மத்திய கிழக்கு (மேற்கு ஆசியா) க்கான புதிய அத்தியாயம் இது" என்று கூறினார்.

இந்த புதிய அத்தியாயத்தை எழுத உதவிய ஜாரெட் குஷ்னர் ( அவர் ஒரு யூதரும் கூட), இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் எப்போதும் உடனிருந்தார். இந்த உடன்படிக்கை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அரசியல் அட்டவணைகளில் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் பயனடைகின்றன. இஸ்ரேலின் அங்கீகாரம் ,பிராந்தியத்திற்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும். பாதுகாப்பு மற்றும் சைபர் சூப்பர் பவர் துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இஸ்ரேலின் உதவி கிடைக்கும். கூடவே, நவம்பர் 3 அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்காளர்களுக்கு முன்னால், மத்திய கிழக்கின் அமைதி தூதராக டொனால்ட் ட்ரம்ப் தம்மை முன்னிறுத்திக்கொள்வார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன், இஸ்ரேலின் முறைசாரா பரிமாற்றங்கள் சில ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆனால் இந்த பிராந்தியத்தில் இரானின் சக்தி அதிகரித்து வருவதால் வளைகுடா நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இடைவெளி கணிசமாகக் குறைந்துள்ளது. ஒமான், பஹ்ரைன் ஆகியவையும் இதற்கு உதாரணங்கள்.

இருதரப்பிற்கும் ரானால் ஆபத்து

"இரானின் அதிகரித்துவரும் வலு, இரு தரப்பினரையும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கிய காரணம். அவர்களுக்கு இரான் மீது அச்சம் உள்ளது," என்று ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்காசிய மையத்தின் பேராசிரியர் அப்தாப் கமால் பாஷா கூறுகிறார்.

அரபு நாடுகளுடன் இஸ்ரேல் நெருக்கமாகி வருவது ஏன்?

பட மூலாதாரம், ANADOLU AGENCY

ஆனால் பேராசிரியர் பாஷாவின் கூற்றுப்படி, இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளின் நெருக்கத்திற்கு இன்னும் பல காரணங்கள் உள்ளன. எண்ணெய் விலைகள் குறைந்து வருவது, வளைகுடா நாடுகளின் அரசுளுக்கு எதிரான கிளர்ச்சி அச்சுறுத்தல் மற்றும் அமெரிக்க ஆதரவு முடிவடையும் என்ற அச்சம் ஆகியவை அந்த காரணங்களாகும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கு அங்கீகாரமும் ,ஏற்புடைமையும் கிடைக்கும் என்றும் மற்ற அரபு நாடுகள் இஸ்ரேலுடன் கைகோர்க்கக்கூடும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

நவீன ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை விற்பனை செய்வதற்கான ஒரு பெரிய சந்தையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸை (இரானின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு) இஸ்ரேல் பார்க்கிறது என்று பேராசிரியர் பாஷா கூறுகிறார்.

பிராந்தியத்தில் மாறிவரும் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் கூடவே கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்கள் ஆகியவையும், இஸ்ரேலை அரபு நாடுகளுடன் நெருக்கத்தில் கொண்டு வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், முஸ்லிம் நாடுகள் முன்னெப்போதையும் விட அதிகமாக பிளவுபட்டுள்ளன என்று அமெரிக்காவின் சான் டியாகோ மாகாண பல்கலைக்கழகத்தின் மேற்கு ஆசியாவின் நிபுணர் டாக்டர் அஹ்மத் குரு கூறுகிறார்.

"மேற்காசியாவில் உள்ள மூன்று முஸ்லீம் திரளணிகளுக்கு இடையிலான பிளவுகளை இஸ்ரேல் பயன்படுத்திக் கொள்ள இது ஒரு நல்ல நேரம். முதலாவது துருக்கி மற்றும் கத்தார், இரண்டாவது ஈரான் மற்றும் ஈராக் மற்றும் மூன்றாவது ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா மற்றும் எகிப்து." என்று பிபிசியிடம் பேசிய அவர் குறிப்பிட்டார். குறிப்பாக மத்திய கிழக்கில் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இடையே அரசியலில் மட்டுமல்ல, மதத்தின் வடிவமைப்பு விஷயத்திலும் போட்டி போன்ற ஒரு நிலை உள்ளது.

செளதி அரேபியாவும் எகிப்தும் அதற்கு ஒப்புதல் அளிக்கும்போதுதான் அரபு நாடுகளுடன் கைகோர்க்கும் இஸ்ரேலின் முயற்சிகள் வெற்றிபெறும் என்று அவர் கூறுகிறார்.

தன்னை சரி என்று நிரூபிக்கும் நெத்தன்யாகுவின் முயற்சி

அரபு நாடுகளுடன் இஸ்ரேல் நெருக்கமாகி வருவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, பாலஸ்தீன பிரச்சனைக்கான தீர்வை ஒதுக்கிவைத்தும், அரபு நாடுகளுடன் அமைதி உடன்படிக்கைகளை எட்ட முடியும் என்று எப்போதுமே கூறிவருகிறார்.

பிரதமர் நேதன்யாகு ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் தன்னை சரி என்று நிரூபிக்க முயல்கிறார் என்று இஸ்ரேலிய அரசியல் நிபுணர் சோனி அவ்னி கருதுகிறார்.

அரேபியர்களுடனான உறவை மேம்படுத்துவதில், வெளியுறவு அமைச்சகம் பல ஆண்டுகளாக டிஜிட்டல் அணுகுமுறையை நடத்தி வருகிறது. இதில் லட்சக்கணக்கான சாதாரண அரபு குடிமக்கள் முறைப்படி அல்லாமல், இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டுள்ளனர் என்று பிபிசியுடனான உரையாடலில் அவர் தெரிவித்தார்.

இந்த முயற்சிகளில் ஒன்று, 40 ஆண்டுகளுக்கு முன்பு இராக்கிலிருந்து இஸ்ரேலுக்கு வெளியேறிய லிண்டா மெனுஹின் அப்துல் அஜீஸ் தலைமையிலானது.

இராக்கில் உள்ள லட்சக்கணக்கான அரபு இளைஞர்களுடன் ,அவர் தனது வெளியுறவு அமைச்சகத்தின் அரபு ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் இணைந்துள்ளார். அரபு நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேலைப் பற்றி வெளிப்படையாகப் பேசாமல் இருப்பது அவர்களது கட்டாயமாக இருக்கலாம், ஆனால் பொது மக்கள் இஸ்ரேல் பற்றிய தகவல்களைப் பெற விரும்புகிறார்கள் என்று அவர் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார்,

இப்போது ஐக்கிய அரபு அமீரக இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக இஸ்ரேலுக்கு செல்லமுடியும். " இடைவெளி குறைந்தால், புகார்களும், தவறான புரிதல்களும் நீங்கிவிடும் ," என்று அவ்னி கூறுகிறார்,

ஆனால் இந்த ஒப்பந்தம் மற்றும் அரேபியர்களுடனான நெருக்கம் அதிகரித்திருப்பது ஆகியவற்றுக்கு, நேதன்யாகு மட்டுமே காரணம் அல்ல என்று சோனி அவ்னி கருதுகிறார்.

" இஸ்ரேலில் தற்போது , இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் ஒன்றிணைந்துள்ள 13 அமைப்புகள், அரபு நாடுகளுடனான இடைவெளியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், இஸ்ரேலிய அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கும், பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கும் மும்முரமாக செயல்பட்டுவருகின்றன , " என்று அவர் கூறுகிறார்.

அமைதியின் கிராமம்

அமைதியின் கிராமம்

பட மூலாதாரம், EPA

இஸ்ரேலில், ஜெருசலேமுக்கும் டெல் அவிவிற்கும் இடையில் மலையில் ஒரு கிராமம் உள்ளது. அதில் பாலத்தீன முஸ்லிம்களும் இஸ்ரேலிய யூதர்களும் ஒன்றாக அன்பாக வாழ்கின்றனர். இந்த கிராமத்தின் பெயர் நேவே ஷாலோம் வஹத் அல் சலாம். இது ஹீப்ரூ மற்றும் அரேபிய சொற்களால் ஆனது. இந்த கிராமம், பாலஸ்தீன-யூத ஒற்றுமைக்கு இஸ்ரேலில் பிரபலமானது.

நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்திற்குச் சென்று இரு சமூகத்தினரையும் சந்தித்தேன். இந்த கிராமத்தில் இரு சமூகங்களுக்கிடையில் வெறுப்பின் சுவர் இல்லை என்பதை அந்த நேரத்தில் நான் உணர்ந்தேன்.

கடந்த மாதம், இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் அந்த கிராமத்தின் பாலஸ்தீனிய பெண் சமா சலாமை நான் மீண்டும் தொடர்பு கொண்டேன். இந்த ஒப்பந்தம் குறித்து அவரது கிராமத்தைச் சேர்ந்த யூதர்கள் மற்றும் முஸ்லிம்களின் கருத்து என்ன என்பதை அவரிடமிருந்து நான் அறிய விரும்பினேன்.

"அரபு-இஸ்ரேலிய வேறுபாடுகள் பல தசாப்தங்கள் பழமையானது. இருவருக்கும் இடையே ஒரு வெறுப்புச் சுவர் எழுந்துள்ளது. நாங்கள் ஒன்றாக வாழ முடியும் என்பதைக் காண்பிப்பதற்காகவே, இந்த கிராமத்தில் 1974 இல் குடியேறினோம்."

"இந்த கிராமத்தின் ஒவ்வொரு குடிமகனும் ஒரு" இரு நாடுகள் தீர்வின் "( டூ ஸ்டேட்ஸ் ஸல்யூஷன்) கீழ் , இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாட்டை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கிறார். அமீரக ஒப்பந்தம் இந்த இலக்கை அடைவதை மேலும் சாத்தியமற்றதாக ஆக்கிவிட்டது." என்பதே அவரது பதில்.

1948 ஆம் ஆண்டிலிருந்து நிலவும் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கான, "இரு நாடுகள் தீர்வு" என்பது, பாலஸ்தீனம் ஒரு தனி சுதந்திர நாடாகவும், இஸ்ரேல் தனி நாடாகவும் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இதற்காக, இரு தரப்பிற்கும் இடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன, ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகள் முடங்கிப்போயுள்ளன.

ஒப்பந்தத்தின் நிபந்தனை

ஒப்பந்தத்தின் நிபந்தனை

பட மூலாதாரம், Reuters

பாலத்தீன பிரச்சனை மற்றும் முஸ்லீம் உலகின் மூன்றாவது புனித நகரமான கிழக்கு ஜெருசலேம் (இது சுதந்திர பாலத்தீனத்தின் ஒரு பகுதியாக இருக்கும்) குறித்தும், இப்போது வரை அரபு நாடுகளின் ஒப்புதல் இருந்தது. பாலத்தீனர்களை தனி நாடு உருவாக்க அனுமதிக்காவிட்டால் , இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கையை செய்துகொள்ளப்போவதில்லை என்று இந்த நாடுகள், இஸ்ரேலுக்கு நிபந்தனை விதித்திருந்தன.

எகிப்து மற்றும் ஜோர்டனுடன் இஸ்ரேலின் சமாதான உடன்படிக்கைகள் இருந்தபோதிலும், இந்த ஒருமித்த கருத்து அரேபியர்களிடையே இருந்தது. ஆனால் இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான புரிந்துணர்வின் காரணமாக, இந்த ஒருமித்த கருத்து உடைந்துவிட்டது போல காணப்படுகிறது..

இது மட்டுமல்லாமல், சூடானும் இஸ்ரேலுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்துகிறது என்பது இப்போது பகிரங்கமாகிவிட்டது. ஆனால் ஒப்பந்தத்தின் விளிம்பில் இருக்கும் சூடான் சிறிது எச்சரிக்கையாகிவிட்டது.

சூடானின் இடைக்கால அரசால் இந்த முடிவை எடுக்க முடியாது என்றும் 2022 ல் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு வரும் புதிய அரசு இதுகுறித்து தீர்மானிக்கும் என்றும் அந்த நாடு கூறுகிறது.

மறுபுறம், அரபு நாடுகளின் மிக சக்திவாய்ந்த நாடான செளதி அரேபியா, இஸ்ரேல் குறித்த தனது அணுகுமுறையை மென்மையாக்கியுள்ளது போலத்தெரிகிறது. அது இஸ்ரேல்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன்படிக்கையை எதிர்க்கவில்லை. இஸ்ரேலிய விமானங்களை செளதி வான்வெளி வழியாக செல்ல அனுமதிப்பதன் மூலம், வரும் ஆண்டுகளில் இஸ்ரேலுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யக்கூடும் என்ற செய்தியை செளதி அரேபியா தெரிவிக்க விரும்புகிறது.

பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் முதலில் தங்கள் உரிமைகளை வழங்க வேண்டும், பின்னர் தான் பேச்சு வார்த்தைகளை நடத்தக்கூடும் என்பது செளதி அரேபியாவின் நிபந்தனையாக இருக்கலாம். மறுபுறம், ஓமானுடனான இஸ்ரேலின் உறவு ஏற்கனவே நன்றாக உள்ளது. இப்போது பஹ்ரைனும் இஸ்ரேலை சந்திக்க தயாராக இருப்பதாக தெரிகிறது.

இந்த திசையில் முன்னேற்றம் எப்படி இருக்கும் என்பது, அமெரிக்க தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதையும் பொறுத்து அமையும்.

2017இல் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, அவர் இந்த பிரச்சினையை விரைவில் தீர்க்க முயற்சி செய்துவருகிறார். இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரக அமைதி ஒப்பந்தம், அமெரிக்காவின் உதவியுடனேயே நிறைவேற்றப்பட்டுள்ளது.

மற்ற அரபு நாடுகளும் இஸ்ரேலுடன் ஒரு அமைதி உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. இதன் காரணமாக இறுதியில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே ஒரு உடன்படிக்கை ஏற்படும். இதனால் மேற்காசியாவில் அமைதி என்றென்றும் நிலைநாட்டப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: