பெண்களுக்கு சொத்தில் சம உரிமை: விளக்கத்தை விரிவுபடுத்திய உச்சநீதிமன்றம்

கோபுப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை: உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது - தினத்தந்தி

குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது என்கிறது தினத்தந்தி செய்தி.

இந்து பெண்கள் சொத்து சட்டப்படி, ஒரு குடும்பத்தில் பெண் பிள்ளைகள் அந்த வீட்டில் தங்குவதற்கு மட்டுமே உரிமை இருந்தது. அவர்களால் குடும்ப சொத்தில் உரிமை கொண்டாட முடியாது. பிறந்த வீட்டில் அளிக்கப்படும் சீதனம் மட்டுமே பெண்களின் சொத்தாக கருதப்பட்டது என்கிறது தினத்தந்தி.

இந்தநிலையில் 1956-ல் 'இந்து வாரிசு உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த சட்டத்தின்படி குடும்பத்தின் சொத்தில் பெண்களுக்கும் சமபங்கு உண்டு என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த சட்டத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த 25.3.1989-க்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ஒரு இந்து பெண் தங்கள் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கேட்க முடியாது. அதற்கு பின்னர் திருமணம் செய்துகொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர உரிமை உண்டு. எனினும் சொத்து பாகப்பிரிவினை 25.3.1989-க்கு முன்பு செய்யப்பட்டிருந்தால் அந்த சொத்தில் உரிமை கோர முடியாது என்று கூறப்பட்டது.

இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், 'இந்து வாரிசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த 2005-ம் ஆண்டுக்கு முன்பு தந்தை உயிர் இழந்து இருந்தால் பெண்கள் அந்த சொத்தில் உரிமை கோர முடியாது' என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்தும் இந்து குடும்பத்தில் பரம்பரை சொத்தில் மகள்களுக்கு சம உரிமை வழங்கிய இந்து வாரிசு திருத்தச் சட்டம் 2005 தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில், 2015 மற்றும் 2018-ல் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இதனால் இந்த விவகாரத்தில் சட்டரீதியான கேள்வி எழுந்தது.

இதற்கிடையே டெல்லி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.அப்துல் நசீர், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்தநிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி இந்து கூட்டு குடும்ப சொத்தில் மகன்களைப் போலவே மகள்களுக்கும் சம உரிமை உண்டு என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:-

ஒரு இந்து குடும்பத்தில், அந்த குடும்பத்தின் சொத்தில் மகள்களுக்கான சம உரிமையை யாரும் மறுக்க முடியாது. இந்து கூட்டு குடும்பத்தின் சொத்து பாகப்பிரிவினையில், தந்தை இந்து வாரிசு உரிமை சட்டம்-2005 திருத்தத்துக்கு முன்பு இறந்து இருந்தாலும் அந்த குடும்பத்தின் ஆண் மக்களுக்கு உள்ளதை போலவே பெண் மக்களுக்கும் அந்த சொத்தில் சம உரிமை உண்டு.

ஏற்கனவே இந்து வாரிசு உரிமை சட்டம் 1956, மகள்களுக்கு வழங்கிய சம உரிமை இன்றும் செல்லும். பெண் மக்களுக்கு சொத்தில் சம உரிமையை மறுக்க முடியாது.

எனவே, இந்த விவகாரம் தொடர்பான வழக்குகள் ஏதேனும் கோர்ட்டுகளில் நிலுவையில் இருந்தால் அவற்றை 6 மாதங்களுக்குள் அந்த கோர்ட்டுகள் முடித்து வைக்க வேண்டும் என்கிறது அச்செய்தி.

"பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்": பிரதமர் மோதி - இந்து தமிழ் திசை

பிரதமர் மோடி

பட மூலாதாரம், Getty Images

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நோய் பரவல் அதிகம் உள்ள, தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், டில்லி, உத்திர பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, குஜராத், பீகார் மாநில முதல்வர்களுடன், நேற்று ஆகஸ்ட் 11-ம் தேதி காலை பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆலோசனை நடத்தினார்.

அப்போது பிரதமர் மோடி, "எந்தெந்த மாநிலங்களில் கொரோனா உடல் பரிசோதனைகள் குறைவாக உள்ளதோ அங்குதான் கொரோனா பாசிட்டிவ் அதிகமாகிறது. குறிப்பாக பிஹார், குஜராத், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தெலங்கானா மாநிலங்களில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். இந்த மாநிலங்களில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டியுள்ளது.

இன்றைய தேதியில் 80% கொரோனா தொற்றுக்கள் இந்த மாநிலங்களில்தான் உள்ளன. எனவே கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்த மாநிலத்தின் பங்கு மிக முக்கியமானது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 6 லட்சத்திற்கும் அதிகம், இந்த 10 மாநிலங்களில்தான் அதிக தொற்றுக்கள் உள்ளன.

எனவே இந்த 10 மாநிலங்கள் ஒருங்கிணைந்து பேசி, ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய தேவை உள்ளது. ஒவ்வொருவரின் அனுபவங்களிலிருந்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த 10 மாநிலங்களில் கொரோனாவை வென்று விட்டால், தேசம் கொரோனாவை வெல்லும்," என்று தெரிவித்தார் என்கிறது அச்செய்தி.

பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை -தினமணி

முதல்வர் பழனிசாமி

பட மூலாதாரம், Getty Images

கொரோனா நோய்த்தொற்றை கண்டறிய மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைக்கான செலவில் பாதித் தொகையை மத்திய அரசு அளிக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பிரதமருடனான ஆலோசனையின்போது கோரிக்கை விடுத்துள்ளார் என்கிறது தினமணியின் செய்தி.

இந்தியாவிலேயே அதிகளவில் பிசிஆர் பரிசோதனைகளை தமிழக அரசு செய்து வருகிறது. இதற்காக 61 அரசு பரிசோதனை நிலையங்கள், 69 தனியார் நிலையங்கள் என மொத்தம் 130 பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நாளொன்றுக்கு 65 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

இதற்காக தினமும் ஐந்து கோடி செலவிடப்படுகிறது. இந்த செலவில் 50 சதவீதத்தை கொரோனாவுக்கென ஏற்படுத்தப்பட்ட பி.எம். கேர்ஸ் நிவாரண நிதியில் இருந்து அளிக்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார் என்கிறது அந்தச் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: