Posted by: மீராபாரதி | October 9, 2021

பழங்குடிகள்: ஒப்பந்தங்களும் குடியேறியவர்களும் – பகுதி 3

கனேடியப் பழங்குடிகள்: ஒப்பந்தங்களும் குடியேறியவர்களும் – பகுதி 3

எழுத்தும் ஏமாற்றும்
வாய்மொழியும் நம்பிக்கையும்

வட அமெரிக்காவில் ஆதிக்குடி மக்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தமக்கேயுரிய பண்பாட்டுடனும் சிக்கலான அரசியல் பொருளாதார உறவுகளுடனும் ஏற்கனவே வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பதை கடந்த பகுதிகளில் பார்த்தோம்.  பிரிட்டிஸ், பிரானஸ், மற்றும் ஐரோப்பியர்கள் இவர்களது நிலங்களை நோக்கி வந்தபோது இந்த புதிய மக்களுடன் தாம் வியாபாரம் செய்வதற்கும் அரசியல் கூட்டுறவை வைத்திருப்பதற்குமான சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளன என நம்பினார்கள். இவர்களுடனான ஒப்பந்தங்கள் எவ்வாறு இவர்களது வாழ்வை மாற்றியது என்பதையும் கனடா என்ற நாடு எவ்வாறு உருவாகியது என்பதையும் இங்கு பார்க்கலாம்.

ஆறு பழங்குடி மக்களின் தேசங்கள் இணைந்து தமக்குள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கியிருந்தனர். இதன் பெயர்  Haudenosaunee (hoe-dee-no-SHOW-nee). “வீட்டை கட்டிய மக்கள்” என அர்த்தம் பெறும்.  இதற்கு Iroquois என இன்னுமொரு பெயர் உள்ளது. இவர்கள் தமக்கிடையில் ஒப்பந்தங்களை செய்வதற்கு ஒரு முறை வைத்துள்ளார்கள். அத்திலாந்திக் கடற்கரைகளில் கிடைக்கின்ற பல்வேறு கடற்சிப்பிகளை (whelk shell, quahog, or hardshelled clams ) கொண்டு  ஊதா நிற சிறிய உருளை குழாய்களையும் வெள்ளை மணிகளையும்  Wampum உருவாக்குவார்கள். இவற்றை சணல் கயிற்றினுடாக ஒன்றிணைத்து two-row wampum belt  இரு வரி மணிப் பட்டிகளை உருவாக்குவார்கள். இதன் மூலமே தமது வரலாற்றையும் சட்டங்களையும் நிர்வாக முறைமைகளையும் பதிவு செய்து பாதுகாத்து வந்தார்கள். காலனிய குடியேற்றக்காரர்களுடனும் இவ்வாறான சிக்கலான அமைப்புகளைக் கொண்ட பட்டிகளைக் கொண்டே ஒப்பந்தங்களையும் உடன்பாடுகளையும் செய்தார்கள்.  மேலும் இவை ஒருவரின் அதிகாரங்களை வெளிப்படுத்தும் சான்றுகளாகவும் வாய்மூல உடன்பாடுகளை பதிவு செய்கின்ற வழிகளாகவும் இருந்தன.  இன்று இவை பழங்குடி மக்களின் அன்றைய இராஜதந்திர உறவுகளுக்கான சான்றுகளாக இருக்கின்றன. இந்த இருவரி மணிப் பட்டிகள் முக்கியமான நிகழ்வுகளின் நினைவுகளைப் பதிவு செய்யவும் பயன்படுத்தியிருக்கின்றார்கள். மேலும் இவற்றை உத்தியோகபூர்வமான சந்திப்புகளுக்கும் ஆன்மீக நிகழ்வுகளுக்கும் கொண்டுவருவார்கள். மேலும் சட்டவரைவிலான பண்பாட்டு மரபுகளைப் பாதுகாக்கவும் குறிக்கவும் மூகமுடிகள், மிருகத் தோல் போர்வைகள் என பலவகையான  பொருட்களையும் பயன்படுத்தினார்கள்.

பழங்குடி மக்களின் நிலங்களுக்குள் அழையாவிருந்தாளிகளாக ஊடுருவிய புதிய மனிதர்களை “ஒல்லாந்தர்களை” எவ்வாறு எதிர்கொள்வது என கூடி ஆராய்ந்தபோது உருவானதே முதலாவது ஒப்பந்தம். பழங்குடி மக்களுக்களின்  (Haudenosaunee) தலைவர்களுக்கும்  ஒல்லாந்தைச் (டச்சுக்காரர்) சேர்ந்த காலனித்துவ அதிகாரிகளுக்கும் இடையில் இவ்வாறான முதலாவது ஒப்பந்தம் 1613யில் கைச்சாத்திடப்பட்டது. மணிகளாலும் சிற்பி உருளைகளாலும் செய்யப்பட்ட இருவரி பட்டியான Gusweñta இதன் குறியீடாக  இருக்கின்றது.  எல்லாப் பட்டிகளைப் போலவும் இதுவும் வெள்ளை மணிகளாலும் உதா நிற உருளைகளாலும் செய்யப்பட்டது. இந்தப் பட்டியலில் காணப்படும் வெள்ளை மணிகளால் செய்யப்பட்ட மூன்று வரிக் கோடுகளும் (shared tenets of friendship, peace, and “forever”)  நட்பையும் அமைதியையும் எப்பொழுதும் பங்கிடுவோம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊதாநிறக் கோடும் பழங்குடி மக்களினதும் ஒல்லாந்தர்களினதும் அந்த மக்களினதும் அவர்களது வாழ்க்கை முறைகளையும் குறிப்பதாகும்.  வாழ்க்கை எனும் நீரோட்டத்தில் பரஸ்பர மரியாதைகளுடன் மற்றவரின் விடயங்களில் தலையிடுவதில்லை என்ற உறுதிப்பாட்டுடன் அருகருகே ஒன்றாகப் பயணிப்போம் என்பதை உணர்த்துவதாகும். இவ்வாறான அர்த்தங்களையும் புரிந்துணர்வுகளையும் கொண்டே இதன் பின்னான காலங்களில் பழங்குடி மக்களின் பிரதிநிதிகள் பிரான்சுடன் 1701 யிலும் பிரிட்டிசுடன் 1763   யிலும் இதுபோன்ற இருவரிப் பட்டி ஒப்பந்தங்களை உருவாக்கினார்கள்.

ஐரோப்பிய வரலாற்றையும் பழக்கவழக்கங்களையும் பொறுத்தவரை ஒப்பந்தம் என்பது சட்டபூர்வமான உடன்பாடாகும். இதில் ஒப்பந்தம் இட்டவர்களின் உரிமைகளும் கடமைகளும் வரையறை செய்யபட்டிருப்பதுடன்  சர்வதேச சட்டங்களால் பாதுகாக்கப்படுவதாகும்.மேலும் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட இறையாண்மையுள்ள தேசங்கள் பேச்சுவார்த்தைகளினுடாக  உடன்பாடு காணப்பட்டு எழுதப்பட்ட இந்த ஒப்பந்தங்கள் இத் தேசங்களுக்கு இடையிலான உறவுகளையும் பாதுகாக்கும். ஆனால் வடஅமெரிக்காவில் பழங்குடி சமூகங்களும் காலனித்துவ சக்திகளும் இவ்வாறான ஒப்பந்தங்கள் தொடர்பாக வேறுபட்ட மரபுகளையும் புரிந்துணர்வுகளையும் கொண்டுள்ளார்கள். இந்தப் புரிந்துணவுகள் இவர்களின் சொந்த சமூக, அரசியல், பொருளாதார பழக்கவழக்கங்களினுடாகப் பகிரப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. காலனித்துவத்திற்கு முற்பட்ட பழங்குடி மக்களின் இவ்வாறான ஒப்பந்தங்கள் ஒரே மாதிரியானவையல்ல. மாறாக ஏற்கனவே பார்த்ததைப் போல இந்த ஒப்பந்தங்கள் பழங்குடி மக்களின் சட்டங்களையும் மரபுகளையும் சம்பிரதாயங்களையும் பழக்கவழங்கங்களையும் வெளிப்படுத்துவதாக இருக்கும். இந்தப் புரிந்துணர்வுகளும் கோட்பாடுகளும் எல்லாப் பழங்குடி மக்களுடனும் அவர்களின் தேசங்களுடனும் பகிரப்பட்டும் அனைவரும் இதற்குப் பொறுப்பு ஏற்பது உறுதி செய்யப்பட்டிருக்கும். கனேடிய அரசுடனான சமகால பிரச்சனைகளையும் முரண்பாடுகளையும் தீர்ப்பதற்கு கூட, பழங்குடி மக்கள் தமது ஒப்பந்த மரபையும் இந்த உடன்பாடுகள் வெளிப்படுத்தும் நோக்கங்களையும் அவர்களுக்கு விளக்கி கூறுவதுடன் அதனை மதிக்கும்படியும் வலியுறுத்துகின்றார்கள்.

ஐரோப்பிய அரசுகள் தமக்குள் பழங்குடிகள் தொடர்பாக முரண்பட்டும் மோதிக்கொண்டும் இருந்தபோதும் வடஅமெரிக்காவை நோக்கிப் பயணித்தார்கள். இந்த மோதல்களை மாபெரும் மொன்றியல் அமைதி ஒப்பந்தம் (Great Peace of Montreal Treaty ) முடிவுக்கு கொண்டுவந்தது.  1701ம் ஆண்டு புதிய பிரான்சும் வட அமெரிக்காவின் மத்தியிலும் கிழக்கிலும் வாழ்ந்த நாற்பது பழங்குடி மக்களுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு பல ஆண்டுகள் அமைதியை ஏற்படுத்தியது. இவ்வாறான ஒப்பந்தங்கள் பழங்குடி மக்களுக்கும் காலனிய சக்திகளுக்கும் இடையில் அமைதியையும் கூட்டுச் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கான அடித்தளங்களை இட்டது. அதேநேரம் இதற்கு சோதனைகளும் வந்து உடைபட்டது மட்டுமல்ல ஐரோப்பிய அரசுகள் தங்களுக்கு இடையிலான மோதல்களையும் முரண்பாடுகளையும் வட அமெரிக்காவிற்கும் கொண்டுவந்தார்கள்.

பழங்குடி மக்களுக்கும் காலனிய குடியேற்றவாதிகளுக்கும் இடையில் மேற்குறிப்பிட்ட ஒப்பந்தங்களைப் போல ஐந்து கட்டங்களாக நடைபெற்ற ஒப்பந்தங்களின் உருவாக்கமே வட அமெரிக்காவில் கனடா என்ற நாடு உருவாவதற்கு காரணமாகியது. பிரிட்டிசும் அதன் பழங்குடி மக்கள் தேசங்களின் ஆதரவு சக்திகளும் வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் இருந்த பிரான்சினதும் இவர்களின் ஆதரவு பழங்குடி மக்களினதும் ஆதிக்கத்தை தோற்கடித்தார்கள். இதன்பின் முதலாவது அமைதிக்கும் நட்புறவுக்குமான ஒப்பந்தங்கள் (Peace and Friendship Treaties)  1725 -1779க்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டன.  பிரிட்சார் அதிகாரத்தைக் கைப்பற்றியபின் உருவான முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு தம் நலன் சார்ந்தும் அதேநேரம் பழங்குடி மக்களின் மரபுகளையும் உள்வாங்கி இராஜதந்திரங்களின் அடிப்படையில் உருவான ஒப்பந்தம் இதுவாகும். இந்த ஒப்பந்தத்தை Mi’kmaq, Maliseet, and Passamaquoddy (இவை இன்றைய  Maine, New Hampshire, New Brunswick, and Nova Scotia பிரதேசங்கள்) சேர்ந்த பழங்குடி மக்களின் பிரதிநிதிகளும் பிரிட்டிஸ் பிரதிநிதிகளும் கைச்சாத்திட்டனர். அமெரிக்க சுதந்திர போர் முடிவுற்றபின்  (1776 -1883) பழங்குடி மக்கள் தம் அதிகாரத்தை காலனிய சக்திகளிடம் இழந்தார்கள். மேலும் காலனித்துவ அதிகாரம் என்பது இராணுவத்திடமிருந்து சிவில் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது. அவர்கள்  “நாகரிகமான சமூகத்தைக்” (“civilization”) கட்டியெழுப்புகின்ற பணியை ஆரம்பித்தார்கள்.

காலனிய குடியேற்றவாதிகள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி தம் ஆக்கிரமிப்பை தொடரும் பொழுதும் ஹிரோன். சுப்பீரியர் (Lake Huron and Lake Superior) வாவிகலுள்ள இடங்களில் முரண்பாடுகள் உருவாகின. குடியேற்றக்காரர்களுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. ஒன்றினைக்கப்பட்ட காலனிய கனடா தனது பிரதிநிதியாக  William Benjamin Robinson என்பவரை பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது. பழங்குடிகள் முதலில் மறுத்தார்கள். பின் தயக்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். றொபின்சன் பழங்குடிகளின் வேட்டையாடுதல் மீன்பிடித்தல் உரிமைகளை உறுதிசெய்தார். இருப்பினும் பழங்குடிகள் கேட்ட அனைத்துடனும் உடன்படவில்லை.  ஒன்டாரியோவின் வட மேற்கில் குடியேற்றங்கள் நடைபெறவும் பழங்குடிகள் தேர்வு செய்த இடங்களில் அவர்கள் வாழ்வதற்கும் 1850யில்  நடைபெற்ற இந்த இரண்டாவது  றொபின்சன் ஒப்பந்தங்கள் வழி செய்தது. இந்த ஒப்பந்தங்களை Robinson-Huron and Robinson-Superior Treaties எனவும் அழைக்கப்படுகின்றன. இவை எதிர்காலத்தில் செய்யப்பட்ட Western Canada’s Numbered Treaties ஒப்பந்தங்களுக்கும் அடிப்படையாக இருந்தன.

1849ம் ஆண்டு ஹட்சன் பே கம்பனி வன்கூர் தீவில் குடியேற்றக் காலனி ஒன்றை உருவாக்கியது.  இவர்கள் ஏற்கனவே இருந்த பழங்குடிகள் தொடர்பாக சிறிய அக்கறையைக் காட்டினார்கள். அதேநேரம் குடியேற்ற காலனியின் தலைமையாளராக இருந்த James Douglas ஹட்சன் பே கம்பனி அதிகாரிகளின் விருப்பத்திற்கும் எதிராக பழங்குடிகளிடமிருந்து காணிகளை வாங்க 14 ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டார்.  இதுவே மூன்றாவது 1850-1854 டக்கிளஸ் ஒப்பந்தங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தங்கள் பழங்குடி மக்களின் நிலங்களின் மீதான உரிமையை இல்லாமல் செய்கின்றது எனவும் வெறுமனே மீன்பிடிக்கவும் தம் கிராமங்களைப் பாதுகாப்பதற்கான உரிமையை மட்டுமே வழங்குவதாக ஹட்சன்பே கம்பனிகள் கூறின. ஆனால் பழங்குடி மக்கள் இவை காணிகள் வாங்குவதற்கான ஒப்பந்தமல்ல மாறாக அமைதிக்கான ஒப்பந்தம் என்றும் மேலும் பழங்குடி மக்களும் புதிய குடியேற்றவாதிகளும் இந்த நிலங்களைப் பகிர்ந்து ஒன்றாக அமைதியாக வாழலாம் எனவும் புரிந்துகொண்டனர்.

 இன்றைய கனடாவின் வடமேற்குப் பகுதி Rupert’s Land  வியாபரம் செய்வதற்காக ஹட்சன் பே  கம்பனிக்கு 1670ம் ஆண்டு வழங்கப்பட்டது. இருப்பினும் இவர்கள் இந்த நிலங்களின் உரிமையாளர்கள் அல்ல. இந்தப் பகுதிகளில் குடியேற்றங்களோ அல்லது வேறு ஏதாவது செய்வதாக இருந்தாலும் உள்ளுர் பழங்குடிகளுடன் தொடர்புகொள்ள வேண்டியிருந்தது. இந்தக் காணிக்கள் பின்பு Earl of Selkirk க்கு வழங்கப்பட்டபோது பழங்குடி மக்கள் குழுக்களான Cree, Assiniboine, Saulteaux, and Métis இவர்களுடன் ஆலோசிக்கப்படவில்லை. இதை சரிசெய்வதற்காக 1817ம் ஆண்டு பழங்குடிகளின் Chief Peguis உட்பட நான்கு தலைவர்கள் Earl of Selkirk உடன் ஒப்பந்தம் செய்தார்கள். இந்த ஒப்பந்தமானது நிலத்தை அவருக்கு அளித்ததாக கனேடிய அரசு கூறியது. ஆனால் 1863யில் Chief Peguis இதனை மறுத்து அவ்வாறான நோக்கம் கொண்டதல்ல என அறிக்கை விட்டார். இருப்பினும் இந்த நிலத்தை பழங்குடி மக்களுடன் உரையாடாமல் கனேடிய அரசு ஹட்சன் பே கம்பனியிடமிருந்து வாங்குவதற்கான வேலைகளை முன்னெடுத்தது. ஆகவே பழங்குடி மக்கள் இதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இது Red River Resistance of 1869-1870 என அழைக்கப்படுகின்றது. குறிப்பாக Métis பழங்குடி மக்கள் Louis Riel தலைமையில் கனேடிய அரச பிரதிநிதிகள் தம் நிலத்திற்குள் வருவதற்கு எதிரான போராட்டத்தை 1869ம் ஆண்டு முன்னெடுத்து அவர்களை வரவிடாமல் தடுத்து வெற்றிகண்டனர். இதன் தொடர்ச்சியாக இவரது தலைமையில் ஒரு மாகாண அரசாங்கத்தை அமைத்து கனேடிய அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தினார்கள். இதன் ஒரு வெளிப்பாடுதான் Manitoba Act of 1870 ஒப்பந்தமாகும். (ஆனால் இந்த ஒப்பந்தத்தில் உறுதி வழங்கிய அடிப்படையில் Métis பழங்குடிகளுக்கான காணிகள் வழங்கப்படவில்லை என கனேடிய உயர் நிதிமன்றம் 2013ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. )

இருப்பினும் முரண்பாடுகளும் புரிதலின்மைகளும் தொடர்ந்தன. தலைமறைவாக இருந்த Métis பழங்குடிகளின் தலைவர்  Louis Riel தன் நிலத்திற்கு வந்து போராட்டத்தை முன்னெடுத்தார். Big Bear, Poundmaker போன்ற பழங்குடி தலைவர்களும் தவிர்க்க முடியாமல் இவருக்கு ஆதரவாகப் போராடினார்கள். ஆனால் அரசு இராணுவம் கொண்டு இவர்களது போராட்டத்தை ஒடுக்கி Louis Riel யை சரணடைய செய்து தூக்குத் தண்டனை அளித்தது. இதன்பின்னரும் Big Bear போன்ற சில பழங்குடி தலைவர்கள் கையொப்பம் இட மறுத்ததுடன் தொடர்ச்சியாக நல்லதொரு உடன்படிக்கைக்கான கோரிக்கையை முன்வைத்தார்கள். அதேநேரம் Sweetgrass, Wihkaskokiseyin, and Mistawawis  போன்ற தலைவர்கள் ஆறாவது உடன்படிக்கையில் கையொப்பம் இட்டார்கள். இவர்களில் Sweetgrass பழங்குடி மக்களால் வெறுக்கப்பட்டார். இறுதியாக உடன்பாடு காணப்பட்டு Big Bear உட்பட பல தலைவர்கள் ஆறாவது உடன்படிக்கையில் கையொப்பம் இட்டார்கள்.

நான்காவது 1871 முதல் 1921 வரை இடப்பட்ட ஐம்பத்தி ஆறு  ஒப்பத்தங்கள். இந்த ஒப்பந்தங்கள் செய்வதற்கு பல்வேறு அக புற காரணங்கள் இருந்தன. அமெரிக்காவினால் மேற்கு நிலங்கள் அபகரிக்கப்படலாம் என்ற பயம் புறக் காரணமாக இருந்தது. அதேநேரம் கிழக்கிலிருந்து மேற்கு வரை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய தேவை கனேடிய அரசுக்கு இருந்தமை அகக் காரணமாக இருந்தது. இக் காலங்களில் செய்யப்பட்ட பல ஒப்பந்தங்களில் பின்வருவன பழங்குடி மக்களுக்கு உறுதி செய்யப்பட்டன. தமக்கான இருப்பிட வசதிக்கான நிலம், வருட வருமானம், அரசுக்கு சொந்தமான நிலங்களில் வேட்டையாடவும் மீன் பிடிப்பதற்குமான உரிமைகள். இவற்றுடன் நாகரிக வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்துவதற்காக குழந்தைகளுக்கு கற்பிக்கும் கல்வித் திட்டங்களும் பாடசாலைகளும் நிறுவுதல் மற்றும் அலைந்து திரியும் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து நிரந்தரமாக வாழ்வதற்கான விவசாய வழிமுறைகளையும் பயிற்சி செய்வது போன்ற கூறுகள் இந்த ஒப்பந்தங்களில் இணைக்கப்பட்டன. இந்த ஒப்பந்தங்களில் கையொப்பமிட்ட பழங்குடித் தலைவர்கள் மேற்குறிப்பிட்டவற்றை நடைமுறைப்படுத்த ஊக்குவிக்கப்பட்டார்கள்.

பழங்குடி மக்களைப் பொறுத்தவரை இந்த உடன்பாடுகள் எல்லாம் எல்லாவற்றையும் காலனிய அரசுக்கு தரைவார்ப்பதல்ல. மாறாக வளங்களையும் நிலங்களையும் அனைவரும் பகிரும்  உரிமைகளையும் கடமைகளையும் கொண்டதாக இருக்க வேண்டும் என்றே புரிந்து கொண்டார்கள். மேலும் இரண்டு அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தமாகவே கருதினார்கள். ஆனால் கனேடிய அரசைப் பொறுத்தவரை பழங்குடி மக்கள் முழுமையாக சரணடைந்துள்ளார்கள் எனவும் இவர்கள் அரச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள் எனவும் புரிந்துகொண்டார்கள். இவ்வாறான வாய்மொழி எழுத்து வழி ஒப்பந்தங்கள் தொடர்பான வேறுபட்ட புரிதல்களுக்கு வேறுபட்ட பண்பாடுகளும் மொழிகளும் காரணங்களாக இருந்தன.

ஐந்தாவது 1975 தொடக்கம் இன்றுவரை செய்யப்பட்ட நவீன ஒப்பந்தங்கள். அதேநேரம் கனடா முழுவதும் இவ்வாறான 500 மேற்பட்ட ஒப்பந்தங்கள் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்வது நல்லது. மேலும் கனடாவின் தெற்கு ஒன்டாரியோவில் 1779-1849க்கு இடையில் பழங்குடி குழுக்களுக்கும் பிரிட்டிசாருக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாடுகளும்  தொடர்பாடுகளும் கூட ஒப்பந்தங்களாக கருதப்பட்டன.

மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு காலகட்டத்தின் போதும் பொருளாதார அரசியல் சமூக இயக்கங்களின் ;விளைவாக ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக காலனிய சக்திகளாக உருவெடுத்தவர்கள்  (பின்பு அரச அதிகாரங்களாக பரிணமித்தவர்கள் ) இந்தக் கண்டத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர போட்டி போட்டார்கள்.  வர்த்தக உறவுகள். போர்க்கால இராஜதந்திரங்கள், குடியேற்றங்களின் அதிகரிப்பினால் ஏற்படும் அழுத்தங்கள், அபிவிருத்திகள் போன்ற அனைத்துக்கும் அதிகாரிகள் பழங்குடி மக்களுடன் உடன்பாடுகளுக்கு வரவேண்டி இருந்தது.  இதன் விளைவாக பழங்குடி மக்களின் விவகாரங்களும் வடக்கு அபிவிருத்தியும் என்ற துறை கனேடிய அரசில் உருவாக்கப்பட்டு பழங்குடி மக்களுடனான உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் விளைவாக கனேடிய அரசு பழங்குடி மக்களின் நில உரிமையை ஏற்றுக் கொண்டது. இப்பொழுது கனேடிய அரசு பல முன்னேற்றகரமான உடன்படிக்கைகளை பழங்குடி மக்களுடன் செய்கின்றது. இருப்பினும் பல முரண்பாடுகள் தொடர்கின்றன.

அல்பேட்டா பல்கலைக்கழத்தின் பழங்குடி மக்களின் பீடம் நடாத்தும் பழங்குடி மக்கள் தொடர்பான கற்கை நெறியின் மூன்றாவது பகுதி இது.

உசாத்துணைகள்
Blake, Raymond B. 2011. Narrating a Nation: Canadian History Pre-Confederation.

Toronto, ON: McGraw-Hill Ryerson.

Borrows, J. 1997. “Wampum at Niagara: The Royal Proclamation, Canadian legal

history, and self-government.” In Aboriginal and Treaty Rights in Canada: Essays

on Law, Equality, and Respect for Difference, edited by Michael Asch, 155–172.

Vancouver, BC: University of British Columbia Press.

—. (2010). Canada’s Indigenous Constitution. Toronto, ON: University of Toronto

Press.

Carter, Sarah. 1991. Lost Harvests: Prairie Indian Reserve Farmers and Government

Policy. Montreal, QC: McGill-Queen’s University Press.

Carter, Sarah. 1999. Aboriginal People and Colonizers of Western Canada to 1900.

Toronto, ON: University of Toronto Press.

Claxton, N. 2007. “Douglas Treaty” Tsawout First Nation.

http://www.tsawout.com/about-tsawout/48-history-douglas-treaty;

Fee, Margery. (2015). Literary land claims: The “Indian land question”: From Pontiac’s

War to Attawapiskat. Waterloo, ON: Wilfrid Laurier University Press.

Goodstriker, Wilton. 1996. “Introduction.” In, The True Spirit and Original Intent of Treaty

7, edited by Walter Hildebrandt, Dorothy First Rider, and Sarah Carter, 3–65.

Montreal: McGill-Queen’s University Press.

Greer, Allan. 2005. Mohawk Saint: Catherine Tekakwitha and the Jesuits. Oxford:

Oxford University Press.

Indigenous and Northern Affairs Canada. Comprehensive Claims. https://www.aadnc%5B1%5Daandc.gc.ca/eng/1100100030577/1100100030578

—. “Peace and Friendship Treaties” . https://www.aadnc%5B1%5Daandc.gc.ca/eng/1100100028589/1100100028591

—. The Numbered Treaties. https://www.aadnc%5B1%5Daandc.gc.ca/eng/1360948213124/1360948312708

—. Summaries of Pre-1975 Treaties. https://www.aadnc%5B1%5Daandc.gc.ca/eng/1370362690208/1370362747827

—. “Upper Canada Land Surrenders and the Williams Treaties (1781-1862)”.

https://www.aadnc-aandc.gc.ca/eng/1360941656761/1360941689121

28

Hildebrandt, Walter, Dorothy First Rider, and Sarah Carter, eds. 1996. The True Spirit

and Original Intent of Treaty 7. Montreal, QC: McGill-Queen’s University Press.

Madill, D.F.K. 1981. “British Columbia Indian Treaties in Historical Perspective.” Treaty

Research Reports, Research Branch, Corporate Policy, Department of Indian

and Northern Affairs. http://www.aadnc%5B1%5Daandc.gc.ca/eng/1100100028952/1100100028954.

McLeod, Neal. 1999. “Rethinking Treaty Six in the Spirit of Mistahi Maskwa (Big Bear).”

Canadian Journal of Native Studies 19 (1): 69–89.

—. (2014). Indigenous poetics in Canada. Waterloo, ON: Wilfrid Laurier University

Press.

Miller, J.R. 1991. Sweet Promises: A Reader on Indian-White Relations in Canada.

Toronto, ON: University of Toronto Press.

—. 2000. Skyscrapers Hide the Heavens: A History of Indian-White Relations in

Canada, 3rd ed. Toronto, ON: University of Toronto Press.

— 2009. Compact, Contract, Covenant: Aboriginal Treaty Making in Canada. Toronto,

ON: University of Toronto Press.

Morris, Alexander. 1991. The Treaties of Canada with the Indians of Manitoba and the

North-West Territories: Including the Negotiations on which they were Based,

and Other Information Relating Thereto. Saskatoon, SK: Fifth House Publishing.

Muller, Kathryn V. 2007. “The Two “Mystery” Belts of Grand River: A Biography of the

Two Row Wampum and the Friendship Belt” The American Indian Quarterly 31

(1): 129–164.

Nunavut Tunngavik Incorporated. Nunavut Land Claims Agreement.

Onondaga Nation. “Two Row Wampum –

Guswenta.”http://www.onondaganation.org/culture/wampum/two-row-wampum[1]belt-guswenta

Parmenter, Jon. 2010. The Edge of the Wood: Iroquois, 1534-1701. Winnipeg, MB:

University of Manitoba Press.

Price, R. 1999. The Spirit of the Alberta Indian Treaties. Edmonton, AB: University of

Alberta Press.

Ray, Arthur J., Miller, Jim, and Tough, Frank. 2002. Bounty and Benevolence: A History

of Saskatchewan Treaties. Montreal, QC: McGill-Queen’s University Press.

29

Simpson, Audra. 2014. Mohawk Interruptus: Political Life Across the Borders of Settler

States. Durham, NC: Duke University Press.

Sprague, Douglas. 1980. “The Manitoba Land Question, 1870-1882.” Journal of

Canadian Studies 15 (3): 74–84.

St. Germain, Jill. 2009. Broken treaties: United States and Canadian relations with the

Lakotas and the Plains Cree, 1868-1885. Lincoln, NB: University of Nebraska

Press.

Steckley, John, and Bryan D. Cummins. 2008. Full Circle: Canada’s First Nations.

Toronto, ON: Pearson Prentice Hall.

Surtees, R.J. (1986)” Treaty research report: The Robinson treaties (1850)”. Treaties

and Historical Research Centre, Indian and Northern Affairs Canada.

https://www.aadnc-aandc.gc.ca/eng/1100100028974/1100100028976,

Supreme Court of Canada. 2013. “Manitoba Metis Federation Inc. v. Canada (Attorney

General) https://scc-csc.lexum.com/scc-csc/scc-csc/en/item/12888/index.do

Tobias, John. 1991. “Protection, Civilization, Assimilation: An Outline History of

Canada’s Indian Policy.” In Sweet Promises: A Reader on Indian-White Relations

in Canada, edited by J. R. Miller, 127–144. Toronto, ON: University of Toronto

Press.

“Two Row Wampum – Guswenta.” 2014. Onondaga Nation. February 22.

http://www.onondaganation.org/culture/wampum/two-row-wampum-belt%5B1%5Dguswenta/

Wicken, William C. 2002. Mi’kmaq Treaties on Trial: History, Land, and Donald Marshall

Junior. Toronto, ON: University of Toronto


Leave a comment

Categories