32.9 C
Chennai
June 12, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, தொகுதி மறுவரையறை திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் தனித்தீர்மானங்கள்!

ஒரே நாடு ஒரே தேர்தல்,  மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு ஆகிய இரண்டு திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இரண்டு தனித் தீர்மானங்களை கொண்டுவந்தார்.

தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், ஆளுநர் உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது.  மூன்றாவது நாளாக இன்று நடைபெறும் அமர்வில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது,  ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்ற இரண்டு தனித் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.  இந்த தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் முன்மொழிந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது :

“நாட்டையும் நாட்டு மக்களையும் அச்சத்திலும் பதற்றத்திலும் வைக்கும் இரண்டு மிக முக்கியமான பிரச்னைகள் குறித்து இந்த மாமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றியாக வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. ஒன்று –  ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்கிற மிக மோசமான எதேச்சதிகார எண்ணமாகும். இதனை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும். இரண்டு – ‘மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு’ என்ற பெயரால் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் சதி, இதனை முறியடித்தாக வேண்டும். இவை இரண்டுமே மக்களாட்சியைக் குலைக்கும் செயல்கள் என்பதால் இவை இரண்டுக்கும் எதிராக நாம் அனைவரும் ஒருசேரக் குரல் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை முதலில் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.முதலில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது எத்தகைய ஆபத்தானது என்பதை விளக்க விரும்புகிறேன். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறை முற்றிலுமாக நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்று. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்திற்கு எதிரானது. அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள “சுதந்திரமான, நேர்மையான” தேர்தலுக்கு முற்றிலும் எதிரானது. ஒரே நேரத்தில் தேர்தல் என்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதாலும் அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம் என்பதாலும் இந்த நடைமுறையை நாம் எதிர்க்க வேண்டும்.

அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைந்து ஒன்றியத்தில் அமையும் ஆட்சி கவிழுமானால், அனைத்து மாநிலங்களையும் கலைத்து விட்டு தேர்தல் நடத்துவார்களா? சில மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்து, தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால் ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் தானாக முன்வந்து பதவி விலகுவார்களா? இதைவிட காமெடிக் கொள்கை இருக்க முடியுமா? நாடாளுமன்ற, சட்டமன்றத்துக்கு மட்டுமல்ல, உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமா? நாடாளுமன்றத் தேர்தலையே கூட, ஒரே நாளில் இந்தியா முழுக்க நடத்துவதற்கு தயாராக இல்லாத சூழல்தான் இப்போது இருக்கிறது? இந்நிலையில், நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், 30 மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்துவது மாயாஜாலமா?

நகராட்சிகளும், பஞ்சாயத்துகளும் மாநில அரசின் நிர்வாக அமைப்புகள் என அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. ஆகவே இவற்றுக்கும் சட்டமன்றம், நாடாளுமன்றத்துடன் தேர்தல் என்பது அரசியல் சட்டவிரோதமானது. உள்ளாட்சித் தேர்தல் முழுக்க முழுக்க மாநில அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருப்பதாகும். அதற்கும் சேர்த்து தேர்தல் நடத்தப் போவதாகச் சொல்வது மாநில உரிமைகளைப் பறிப்பதாகும். மாநில உரிமைகள், கூட்டாட்சித் தத்துவம், அனைவருக்கும் சம வாய்ப்பு ஆகியவற்றை வழங்கும் அரசியல் சட்டத்தைச் சிதைக்கவோ, உருமாற்றவோ, விரைவில் மக்களால் நிராகரிக்கப்படவுள்ள நாடாளுமன்ற மெஜாரிட்டி உள்ளோரின் சுயநலத்திற்கு யாரும் பலியாகிவிடக் கூடாது. எனவே நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சிகள், பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு “ஒரே நாடு-ஒரே தேர்தல்” என்ற நடைமுறையை மிக கடுமையாக எதிர்த்தாக வேண்டும்.இரண்டாவதாக தொகுதி மறுவரையறை குறித்த ஆபத்துகளை விளக்க விரும்புகிறேன். தொகுதி மறுவரையறை என்ற திட்டத்தில் தென்னிந்திய மக்களை, குறிப்பாக, தமிழ்நாட்டு மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை குறைக்ககூடிய ஆபத்து, சூழ்ச்சி இருக்கிறது. இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்! தமிழ்நாட்டின் மீது, தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை (delimitation) உள்ளது. அரசியல் விழிப்புமிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

இந்திய அரசமைப்பின் 82 மற்றும் 170-ம் பிரிவுகளின்படி, ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகும், நாடாளுமன்றம், மாநிலச் சட்டமன்றங்களில் புதிய இடங்கள் உருவாக்கப்படுகின்றன. ஏற்கனவே உள்ள தொகுதிகளின் எல்லைகள் மறுசீரமைக்கப்படுகின்றன. எல்லை நிர்ணய சட்டத்தின்படி இவை செய்யப்படுகிறது. இந்தச் சட்டத்தின்படி எல்லை நிர்ணய ஆணையத்தை (Delimitation Commission of India)  ஒன்றிய அரசு அமைத்து வருகிறது. இதுவரை 1952, 1962, 1972 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் எல்லை நிர்ணய ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் 1976-ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகும், மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்றப் பேரவை இடங்கள் மறுநிர்ணயம் செய்யப்பட்டு வந்தன. இவ்வாறு மறுநிர்ணயம் செய்யும்போது, மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்றப் பேரவைகளின் இடங்கள் குறைக்கப்படுகின்றன. அதாவது  ‘மக்கள்தொகைக் கட்டுப்பாடு’ எனும் கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்தி, மக்கள்தொகையை குறைத்துக் கொள்ளும் மாநிலங்களுக்குத் தரப்படும் தண்டனையாக இது அமைந்துள்ளது.

இதனால் மக்கள்தொகை குறையும். மாநிலங்களுக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும். மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் ஆர்வம் செலுத்தாத மாநிலங்கள் கூடுதல் பரிசைப் பெறும்; அவற்றுக்கான  பிரதிநிதித்துவம் அதிகமாகும். இதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை நாம் எதிர்த்தாக வேண்டும். மக்கள்தொகை குறைவதால் ஜனநாயக உரிமைகள் மாநிலங்களுக்குக் குறையக் கூடாது என்பதால்தான் அரசியலமைப்பில் 42-ஆவது சட்டத் திருத்தம் செய்யப்பட்டது.

2001-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரை, தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்வதை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருந்தது. அதுபோலவே, அரசியலமைப்புச் சட்டத்தின் 84-ஆவது திருத்தமும் செய்யப்பட்டது. தொகுதிகளின் எண்ணிக்கையில் 2026-ஆம் ஆண்டு வரை மாற்றம் செய்யப்படமாட்டாது என்றும்,
2026-ஆம் ஆண்டிற்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்றப் பேரவைகளில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படும் என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்தால், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடும் பீகாரும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான மக்கள்தொகையைக் கொண்டிருந்ததால் மக்களவையில் கிட்டத்தட்ட ஒரே அளவிலான தொகுதிகளைக் கொண்டிருந்தன. இன்று தமிழ்நாட்டோடு ஒப்பிடுகையில் பீகாரின் மக்கள்தொகை ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால், ஒன்றிய அரசு மேற்கொள்ள உத்தேசித்துள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழ்நாட்டில் தற்போதுள்ள மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டப்பேரவை இடங்களின் எண்ணிக்கை பல வடமாநிலங்களின் எண்ணிக்கையை விட விகிதாசாரத்தில் குறைந்து விடும். இதனை நினைத்துப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் உரிமைக்காக இவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.மக்கள்தொகை அடிப்படையில் தொகுதியை குறைத்துவிட்டால் உறுப்பினர்கள் எண்ணிக்கைய குறைந்து விடுவார்கள். 39 எம்.பி.க்கள் இருக்கும்போதே ஒன்றிய அரசிடம் கெஞ்சிக் கொண்டு இருக்கிறோம். இதிலும் குறைந்தால் என்ன ஆகும்? தமிழ்நாடு, கோரிக்கை வைக்கும் பலத்தை இழக்கும். அதன் சக்தியை இழக்கும்.  அதனால் அதன் உரிமைகளை இழக்கும். இதனால் தமிழ்நாடு பின்தங்கி விடும். எனவேதான் தொகுதி வரையறை, மறுசீரமைப்பு என்ற பெயரால் தொகுதிகளின் எண்ணிக்கையை எந்தச் சூழலிலும் குறைக்கக் கூடாது என்கிறோம். மக்கள்தொகைக் குறைந்து விட்டதைக் காரணம் காட்டி, தென் மாநிலங்களுக்குத் தொகுதிகளைக் குறைப்பது தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை பலவீனம் அடையச் செய்யும். எனவே, அனைத்து மாநிலங்களிலும் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ளும் வரை, தொகுதிகளின் எண்ணிக்கையை இப்படியே தொடரச் செய்வதே சரியாகும்.

இதேபோன்ற பாரபட்சம்தான் நிதி ஒதுக்கீட்டிலும், நிதி பகிர்விலும் காட்டப்படுகிறது. மக்கள்தொகையைக் காரணமாகக் காட்டி  தென்னிந்திய மாநிலங்களுக்கு வரி வருவாயில் பங்கு குறைந்துவிட்டது. இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள் இணைந்த மாபெரும் நாடு! பல்வேறு மாநிலங்கள் இணைந்த கூட்டாட்சி  கூட்டரசு இது! இங்கு  எந்த மாநிலமும் பிற மாநிலத்தைவிட உயர்ந்ததோ, முக்கியமானதோ அல்ல, அனைத்தையும் சமமாக நடத்த வேண்டும். மக்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே பிரதிநிதித்துவம் என்று கணக்கிடப்பட்டு, மாநிலங்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டால், புவியியல், மொழி, பொருளாதார, அரசியல் பின்னணிகளைப் புறந்தள்ளும் செயலாகிவிடும். மக்களாட்சியின் ஆதாரப் பண்பையே அது நாசமாக்கிவிடும். இதனால் ஏற்கனவே கனல் வீசிக்கொண்டிருக்கும் எதிர்ப்புணர்வுகளை மேலும் வளர்ப்பது போலாகிவிடும்.

இந்தியாவின் ஒற்றுமையை இதுநாள் வரை கட்டிக்காத்து வரும் கூட்டாட்சித் தத்துவத்தை மீறும் செயல் எதையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளக் கூடாது. அதிக தொகுதிகள் மூலம் ஆதிக்கம் செலுத்துவது கூட்டரசின் தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகிவிடும். 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று நாம் வலியுறுத்த வேண்டும்.

தவிர்க்க இயலாத காரணங்களினால் மக்கள்தொகையின் அடிப்படையில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தவேண்டிய நிலை ஏற்பட்டால், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை இந்தச் சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு முக்கிய தீர்மானங்களையும் நிறைவேற்றித் தருமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் பின்வரும் தீர்மானங்களை முன்மொழிகிறேன்.அரசினர்தனித்தீர்மானங்கள்

தீர்மானம் 1

“2026 ஆம்‌ ஆண்டுக்குப்‌ பிறகு மக்கள்தொகைக்‌ கணக்கெடுப்பின்‌ அடிப்படையில்‌ மேற்கொள்ளப்படவிருக்கும்‌ தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக்‌ கைவிட வேண்டும்‌ என்றும்‌ தவிர்க்க இயலாத காரணங்களினால்‌ மக்கள்தொகையின்‌ அடிப்படையில்‌ சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளின்‌ எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால்‌, 1971 ஆம்‌ ஆண்டு மக்கள்‌ தொகையின்‌ அடிப்படையில்‌ தற்பொழுது மாநிலச்‌ சட்டமன்றங்களிலும்‌ நாடாளுமன்றத்தின்‌ இரு அவைகளிலும்‌ மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில்‌ தொகுதிகளின்‌ எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில்‌ தொடர்ந்து இருக்கும்‌ வகையில்‌ சட்டத்‌ திருத்தம்‌ மேற்கொள்ள வேண்டும்‌ என்று ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

மக்கள்‌ நலன்‌ கருதி கடந்த 50 ஆண்டுகளுக்கும்‌ மேலாக பல்வேறு சமூகப்‌ பொருளாதார வளர்ச்சி திட்டங்களையும்‌ மக்கள்‌ நல்வாழ்வு திட்டங்களையும்‌ சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள்‌ தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்றும்‌ இந்தப்‌ பேரவை வலியுறுத்துகிறது” என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

தீர்மானம் 2

“‘ஒரு நாடு ஒரு தேர்தல்’‌ என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதாலும்‌; நடைமுறைக்குச்‌ சாத்தியமில்லாத ஒன்று என்பதாலும்‌; அது இந்திய அரசமைப்புச்‌ சட்டத்தில்‌ வகுக்கப்படாத ஒன்று என்பதாலும்‌; இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பரந்து விரிந்த நாட்டில்‌ உள்ளாட்சி அமைப்புகள்‌, மாநிலச்‌ சட்டமன்றங்கள்‌ மற்றும்‌ நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள்‌ பல்வேறு காலகட்டங்களில்‌ மக்கள்‌ பிரச்சினைகளை முன்வைத்தே நடத்தப்படுவதாலும்‌; அதிகாரப்‌ பரவலாக்கல்‌ என்ற கருத்தியலுக்கு அது எதிரானது என்பதாலும்‌ ‘ஒரு நாடு ஒரு தேர்தல்‌’ திட்டத்தினை நடைமுறைப்படுத்தக்‌ கூடாது என்று ஒன்றிய அரசை இந்தப்‌ பேரவை வலியுறுத்துகிறது” என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன். மேற்காணும் இரண்டு தீர்மானங்களையும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading